Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, September 20, 2010

பைக்'ல வேகமா போறவங்களா நீங்க? இது உங்களுக்குத்தான்....

பைக்'ல ஏறி உட்கார்ந்து விட்டால் பெரும்பாலோனோர் பறக்கவே விரும்புகிறார்கள். அர்ஜென்ட் அல்லது ஆர்டினரி என்றெல்லாம் இல்லை. சாதாரணமாகவே ஸ்பீடா போவதே வழக்கம். இதில் ஆண், பெண் என்ற பேதமில்லை. அதிலும் ஹெல்மெட் அணிவதையும் யாரும் விரும்புவதில்லை.

வேகமாக சென்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இல்லாதபோது, நான் கொஞ்சம் நார்மல் ஸ்பீடில் செல்லுவது வழக்கம். என்னுடன் பணிபுரியும் நண்பர் எப்போதுமே மிக வேகமாகவே செல்வதே வழக்கம். அவருடன் பின்னால் உட்கார்ந்து செல்லும்போதே எனக்கு எப்போதும் ஒரு கிலியாகவே இருக்கும். அவ்வளவு வேகமாக செல்வார். நானும் சிலசமயங்களில் கொஞ்சம் மெதுவாக செல்லுமாறு சொல்வேன்.
 
திடிரென அவர் மெதுவாக செல்ல ஆரம்பித்து விட்டார். காரணம் அவர் வண்டியின் பின் டயர் மிகவும் தேய்ந்து போய் விட்டதால், மாற்றும் வரை மெதுவாக செல்வோம் என முடிவு செய்துவிட்டார். ஒரு நாள் பேச்சுவாக்கில், "சார்.. முன்பெல்லாம் என் வண்டி லிட்டருக்கு 45KM கொடுத்தது. இப்போது 65KM கொடுக்க ஆரம்பித்து விட்டது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனவே இனி எப்போதும் மெதுவாகவே செல்லலாம் என முடிவு செய்துவிட்டேன்" என்றார்.
நானும் பார்த்தேன். நல்ல ஐடியாவா இருக்கே...நாமும் டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம் என்று 30 to 45 க்குள் செல்ல ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்?!? என் வண்டி 55KM கொடுத்துக்கொண்டிருந்தது இப்போது 70KM கொடுக்க ஆரம்பித்து விட்டது. நான் இப்போதெல்லாம் அந்த ஸ்பீடிலேயே செல்ல ஆரம்பித்துவிட்டேன்.


இதனால் என்ன நன்மை?...
1)  நீங்கள் வீட்டிலிருந்து, அலுவலகத்திற்கு செல்ல ஸ்பீடாக செல்வதற்கும், மெதுவாக செல்வதற்கும் ஒன்னும் பெரிய நேரத்தை நீங்கள் மிச்சபடுத்தி விட முடியாது. இரண்டிலிருந்து ஐந்து நிமிடம்தான் நீங்கள் சேமிக்க முடியும். ஆனால் அதைவிட உங்கள்  உயிர் முக்கியமில்லையா? 

2) நீங்கள் மெதுவாக செல்லும்போது வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். குறுக்கே யார் வந்தாலும் விபத்தை பெரும்பாலும் தவிர்த்து விட முடியும்.

3) பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் இந்நாட்களில்,  மெதுவாக செல்வதன் மூலம்  ஒரு மாதத்தில் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.  உங்கள் வீட்டிற்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது. சுற்றுப்புற சூழ்நிலைக்கும் நல்லது.

4) ஹெல்மெட் அணியாமல் சென்றாலும், மெதுவாக செல்வதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம். (ஹெல்மெட் அணிவது அவசியம்  என்பதில் மாற்றுக் கருத்தில்லை.)

5) விரைவாக சென்று சேர்வது முக்கியம் என்றாலும்,   சென்று சேர வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக செல்வது
அதைவிட அவசியமில்லையா?

இப்படி பல நன்மைகள் இருக்கும் போது ஏன் நாம் வேகமாக பயணம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம்தான். வேகமாக வண்டி ஓட்டிப் பழகியவர்களுக்கு மெதுவாக செல்ல ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் மனதை கண்ட்ரோல் செய்து மெதுவாக செல்ல ஆரம்பித்தால், பின் அதுவே பழக்கத்திற்கு வந்து விடும்.

இது ஒன்னும் அறிவுரை இல்லைங்க... என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். சரி என படுபவர்கள் பின்பற்றி பார்த்து பயனடையுங்கள்.

வாழ்க வளமுடன்!

Thursday, June 11, 2009

சுமை கால் பணம், கூலி முக்கால் பணம்

சுமை கால் பணம், கூலி முக்கால் பணம் என்ற பழமொழியை நீங்கள் எல்லோரும் கேள்விப் பட்டிறுப்பீர்கள். அதே நிலைமைதான் என் நண்பருக்கு ஏற்பட்டுள்ளது. என் நண்பர் வட மாநிலம் ஒன்றில் வங்கிப் பணியில் இருந்து தமிழகத்திற்கு மாறுதல் ஆகி வந்துள்ளார். அவர் அங்கு ஸ்ப்லென்டர்+ பைக் வைத்திருந்தார். வாங்கி ஒரு வருடம்தான் ஆகிறது. வரும்போது அந்த பைக்கையும் எடுத்து வந்து விட்டார். வண்டியை எடுத்து வரும் போது அந்த மாநில RTO அலுவலகத்தில் இருந்து NOC(No Objection Certificate) வாங்கி வந்து விட்டார்.

இங்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் அந்த பைக்கை ரெஜிஸ்தெர் செய்ய வேண்டும். இங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. வண்டி வாங்கி ஒன்றரை வருடத்திற்குள் வேறு மாநிலத்திலிருந்து இங்கு வந்து ரெஜிஸ்தெர் செய்ய வேண்டும் எனில் கமெர்சியல் டேக்ஸ் அலுவலகத்தில் வண்டியின் இன்வாயிஸ் மதிப்பில் 12.5% மற்றும் R.T.O. அலுவலகத்தில் 8% மற்றும் இன்ன பிற செலவுகளும் இருப்பதாக அறிய நேர்ந்தது. அதுவே வண்டி வாங்கி ஒன்றரை வருடத்திற்கு பிறகு
ரெஜிஸ்தெர் செய்ய வேண்டும் எனில் கமெர்சியல் டேக்ஸ் அலுவலகத்தில் 12.5 சதவீதம் செலுத்தத் தேவை இல்லை. R.T.O. அலுவலகத்தில் மட்டும் 8% மற்றும் இன்ன பிற செலவுகள் செய்தால் போதுமானது. இந்த இன்ன பிற செலவுகள் என்பது 200 ருபாய் அலுவலகத்திற்கும் மற்றும் அவரவர் திறமைக்கு ஏற்ப செய்யும் செலவுகள் ஆகும்.

என் நண்பர் வண்டி வாங்கி ஒரு வருடம்தான் ஆகிறது என்பதால் கிட்டத்தட்ட 8-10 ஆயிரம் ருபாய் செலவு ஆகும். இதற்க்கு வண்டியை அங்கேயே விற்று விட்டு வந்திருக்கலாம் என இப்போது எண்ணுகிறார் . இப்போது என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கும் வர முடியாமல் குழப்பமாக இருக்கிறார்.

எனவே, நண்பர்களே! வேறு மாநிலத்தில் இருந்து வண்டியை தமிழ்நாட்டிற்க்கு எடுத்து வரும் முன்பு, நன்கு யோசித்து பின் இங்கு எடுத்து வாருங்கள்! என் நண்பரைப் போல் அவசரப் பட்டு எடுத்து வந்துவிட்டு சிரமப்பட வேண்டாம்.

Friday, March 6, 2009

கிரெடிட் கார்டுடன் என் அனுபவங்கள்!



கடந்த 5 வருடத்திற்கு மேலாக கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டை உபயோகித்து வந்தேன்! அதில் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒருவருக்கேனும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் மட்டுமே இந்த பதிவு!

என் அலுவலகத்தின் வெளியே தற்காலிக கடைக் கட்டி கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் நீண்ட யோசனைக்குப் பிறகு சென்று, ஒரு சுபயோக சுப தினத்தில் கிரெடிட் கார்டுக்கான படிவத்தை வாங்கி கையெழுத்து மட்டும் போட்டேன். மற்றதை அவர்களே பூர்த்தி செய்து கொண்டார்கள்! ஒரு புகைப்படமும், என் சம்பள ரசீதையும், முகவரிக்கான சான்றையும் கொடுத்தேன்! கூவி கூவி விற்று கொண்டிருந்ததால் உடனே கொடுத்து விடுவார்கள் என்று நினைத்திருந்தேன்! ஆனால் அவர்கள் நான் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்து அந்த முகவரியில்தான் இருக்கிறேனா என்பதை உறுதி செய்து கொண்டே தபாலில் கிரெடிட் கார்டு அனுப்பி வைத்தார்கள்!

கார்டு வந்தவுடன் அவர்களின் இணைய தளத்திற்கு சென்று பதிவும் செய்து கொண்டேன்! அந்த கிரெடிட் கார்டில் முன் பக்கத்தில் என் பெயரும், அந்த கிரெடிட் கார்டு எந்த மாதம்/வருடம் வரை உபயோகிக்கலாம் என்ற விபரமும், நான்கு நான்கு பிரிவாகப் பிரித்து 16 இலக்கங்களில் கிரெடிட் கார்டு எண்ணும் இருந்தது. பின் புறத்தில் என் கையொப்பத்தை இட்டேன். அங்கே மூன்று இலக்கங்களில் CVV (CARD VERIFICATION VALUE CODE) எண் இருந்தது. பின் ஒரு வாரத்தில் தபாலில் நான்கு இலக்க PIN நம்பரும் வந்தது!


ஆண்டு கட்டணம் என்று எதுவும் இல்லை. இப்பொழுதெல்லாம் அனைத்து வங்கிகளுமே இலவசமாகவே கிரெடிட் கார்டு அளிக்கிறார்கள்.


கிரெடிட் லிமிட்:
என் வருமானத்திற்கு ஏற்ப 35000 ரூபாய் எனக்கு லிமிட்டாக கொடுத்திருந்தார்கள். இதில் அதிகபட்சம் 14000 ரூபாய் வரை நான் பணமாக எடுத்துக் கொள்ள முடியும். ATM சென்று அந்த நான்கு இலக்க PIN ஐ உபயோகித்து இந்த பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். அப்படி எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு ATM சேவை கட்டணமாக எடுத்துக் கொள்வார்கள். மேலும் அன்றிலுருந்தே வட்டி கணக்கிட ஆரம்பித்து விடுவார்கள். இதுவே நீங்கள் கடைகளில் பொருட்களாக வாங்கினால் குறைந்த பட்சம் 20 நாட்கள், அதிக பட்சம் 50 நாட்கள் வரை வட்டி கணக்கிட மாட்டார்கள்.

இங்கே கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? அதாவது மாதம் ஒரு முறை நமக்கு பில் அனுப்புவார்கள். எடுத்துகாட்டாக எனக்கு ஒரு
மாத பில் என்பது சென்ற மாத 3 ஆம் தேதியிலிருந்து இந்த மாத 2 ஆம் தேதிவரை. இதற்கான பில் தொகையை இந்த மாத 22 ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும். எனவே சென்ற மாதம் 3 ஆம் தேதி நீங்கள் ஒரு பொருளை வாங்கி இருந்தால் அதற்கான தொகையை 50 நாட்கள் கழித்து இந்த மாதம் 22 ஆம் தேதிக்குள் கட்டி விட வேண்டும். அதுவே இந்த மாதம் 2 ஆம் தேதி நீங்கள் ஒரு பொருளை வாங்கி இருந்தால் அதை 20 நாட்கள் கழித்து இந்த மாதம் 22 ஆம் தேதியே செலுத்தி விட வேண்டும். இதைதான் குறைந்த பட்சம் 20 நாட்கள், அதிக பட்சம் 50 நாட்கள் வரை வட்டி கணக்கிட மாட்டார்கள் என்று சொன்னேன்.


இவ்வாறு அனுப்பும் மொத்த பில் தொகையில் குறைந்த பட்சம் 5 சதவீதம் கட்டினால் போதும் என்பார்கள். மீதமுள்ள தொகையை வட்டி போட்டு அடுத்தடுத்த மாதங்களில் நீங்கள் செலுத்தலாம். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது பில் தொகை மொத்தமாக செலுத்தினால் மட்டுமே "குறைந்த பட்சம் 20 நாட்கள், அதிக பட்சம் 50 நாட்கள் வரை வட்டி கணக்கிட மாட்டார்கள்" என்பது நீங்கள் தொடர்ந்து வாங்கும் பொருட்களுக்கு பொருந்தும். அதாவது சென்ற மாத பில் தொகை அனைத்தும் நீங்கள் செலுத்தி இருந்தால் மட்டுமே இந்த மாதத்தில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு வட்டி கணக்கிட மாட்டார்கள், இல்லை எனில் பொருட்கள் வாங்கிய தினத்திலிருந்தே வட்டி போட ஆரம்பித்து விடுவார்கள்.


கடைகளில் கிரெடிட் கார்டு:
கடையில் பொருட்கள் வாங்கும் பொது நமது அட்டையை அதற்குரிய கருவியில் தேய்த்து தொகையை நமது கணக்கில் சேர்த்து விடுவார்கள். 2 பில் கொடுப்பார்கள். ஒரு பில்லை கையொப்பம் இட்டு அவர்களிடம் கொடுத்து விட்டு மற்றொரு பில்லை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். சில கடைகளில் 1 அல்லது 2 சதவீதம் சேவை கட்டணமாக வசூலிப்பார்கள். மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கும் போது சேவை கட்டணம் இருக்கும்.

இணையத்தில் உபயோகிக்கும் முறை:
இணையத்தில் உபயோகிக்கும் போது 16 இலக்க கிரடிட் கார்டு நம்பரையும் 3 இலக்க CVV நம்பரையும் கொடுக்க வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங், ரயில் டிக்கெட், விமான டிக்கெட் போன்றவற்றிற்கு பயன் படுத்தலாம்.

இவ்வாறு நாம் ஷாப்பிங் செய்யும் விபரங்களை உடனக்குடன் இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் தவறு இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் தெரியப் படுத்தி சரி செய்து கொள்ள முடியும்.

நான் கவனத்தில் கொண்டது
1) அந்தந்த மாதத்திற்கான பில் தொகையை முழுவதுமாக கட்டி வட்டியை தவிர்த்து விடுவேன். அவர்கள் வட்டி கணக்கிடும் முறையை நம்மால் அறிந்து கொள்வது மிகவும் கடினம்.

2) கூடுமான வரை கிரெடிட் கார்டு ஐ பயன்படுத்தி பணம் எடுப்பதை தவிர்த்து விடுவேன்.

3) எனது அலுவலக கணினியைத் தவிர வேறு எந்த கணினியையும் கிரெடிட் கார்டுக்காக உபயோகிக்க மாட்டேன். ப்ரொவ்சிங் சென்டர் மிகவும் அபாயகரமானது.

4) மொஜில்லா ப்ரோவ்செரை (Mozilla Browser) மட்டுமே உபயோகிப்பேன். உபயோகித்தவுடன் ப்ரொவ்ஸெர்லிருந்து அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் நீக்கி விடுவேன், ஒவ்வொரு முறையும்.

5) கிரெடிட் கார்டு தானே என்று அளவுக்கு மீறி செலவு செய்ய மாட்டேன்.

6) அவ்வப்போது கஷ்டமெர் கேர் சென்டெரில் இருந்து ஏதேனும் ஆப்பஃர் (Offer) தருவதாக அழைத்தால் கூடுமான வரை தவிர்த்து விடுவேன்.

பலன்கள்:
1) அவசரமாக ஏதேனும் ஒரு பொருள் வாங்க வேண்டிய போது நமது கையில் பணம் இல்லாதபோது மிகவும் உபயோகமாக இருக்கும்.

2) அவசரமாக பணம் தேவைப்படும் போது, நமது நண்பர்களிடமே கேட்க கூச்சப்படும் போது இது மிகவும் உதவி செய்யும்.

3) வெளியூர் சென்றிருக்கும் போது ஏதேனும் அவசரத் தேவை எனில் ஆபத்பாந்தவனாக உதவும்.

4) நாம் செலவு செய்யும் ஒவ்வொரு 50 ரூபாய்க்கும் 1 பாயிண்ட் கிடைக்கும். இந்த பாயிண்ட்களை பயன்படுத்தி நமக்கு தேவையான பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

முடிவாக
கிரெடிட் கார்டு என்றவுடன் எதோ என்னமோ என்று பயப்படத் தேவையில்லை. நாம் எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்தே இதன் பலன் தெரியும். கட்டுப்பாடான மனம் உள்ளவர்கள் மட்டுமே எந்த வித தொந்தரவும் இன்றி பயன் படுத்தலாம். கட்டுப்பாடான மனம் இல்லை எனில் கண்டிப்பாக கிரெடிட் கார்டை தவிர்த்து விடுவது புத்திசாலித்தனமானது. கிரெடிட் கார்டால் ஏற்படும் நன்மை தீமை அனைத்துமே உங்கள் கையில் தான் இருக்கிறது. அளவுக்கு மீறி செலவு செய்து விட்டு, பணம் கட்டாமல், வட்டி மேல் வட்டி ஏறி, பின் வங்கிகளை குற்றம் சொல்லி பயன் இல்லை. கிரெடிட் கார்டு மோசடியால் கோடிக்கணக்கான பணம் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் சொல்கிறது.


டிஸ்கி: நான் பயன்படுத்திய கிரெடிட் கார்டு எஸ்.பீ.ஐ. தற்பொழுது நான் என்னுடைய கிரெடிட் கார்டை கேன்சல் செய்து விட்டேன். ஒரு தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் கேன்சல் செய்து விட்டேன். மற்றபடி என்னை பொறுத்தவரை மிகவும் உபயோகமாகவே இருந்தது.