Wednesday, January 12, 2011

எந்த வேலை மேலானது? கண்ணியமானது?




Dignity of Labour என்பது எல்லா வேலைகளையும், தொழில்களையும் சமமாக பாவிக்க வேண்டும், நேசிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்ற உயரிய அர்த்தம் கொள்ளப்படவேண்டியது. உண்மையில் எந்த வேலைகளிலும்  ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை. நாம் பார்க்கும் பார்வைகளில்தான்  ஏற்றத்தாழ்வு என்பது இருக்கிறது.  அது எவ்வளவு பெரிய தவறு என்று என்றேனும் நாம் சிந்தித்து இருக்கிறோமோ என்றால் இல்லை என்பதே பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கும். அதைப்பற்றிய ஒரு சிந்தனையைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம். 

               
ஆங்கிலத்தில் White collar Job எனும் தினம் நேர்த்தியாக சலவை செய்யப்பட்ட ஆடைகளையே உடுத்திக்கொண்டு அலுவலகம் சென்று வரும் வேலை மட்டுமே அனைவரும் செய்ய ஆசைபட்டால் மற்ற வேலைகளை யார்தான் செய்வது? யோசித்துப்பாருங்கள்...  நீங்கள்  பள்ளிக்கு/ அலுலகத்திற்கு வரும்  முன்புஒரு தொழிலாளி  அதிகாலையிலே வந்து உங்கள் வகுப்பறையை/ அலுவலக அறையை   கூட்டி பெருக்கி சுத்தம் செய்யாவிட்டால் நீங்கள் போய் அமர்ந்து படிக்கவோ உங்கள் வழக்கமான வேலையையோ  செய்ய  முடியுமா? கழிப்பறையை நாள்தோறும் சுத்தம் செய்யாவிட்டால் நீங்கள் அதை பயன் படுத்த முடியுமா

 
நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து இங்கு பள்ளிக்கு வந்து சேரும் வரை எத்தனை தொழிலாளர்களின் எத்தனை விதமான வேலைகளையும், உழைப்பையும் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று ஒருநாளாவது சிந்தித்து உள்ளீர்களா? உங்களுக்கு தேவையான தண்ணீரை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததில் ஒரு தொழிலாளியின் உழைப்பு. நீங்கள் உடுத்தி இருக்கும் ஆடைகளுக்கு தேவையான பருத்தியை விளைவித்தது, அதை நேர்த்தியாக உங்களுக்கு வடிவமைத்து கொடுத்தது, நீங்கள் சாப்பிட்ட உணவை விளைவித்தது, நீங்கள் பள்ளிக்கு வந்த வாகனத்தை வடிவமைத்தது, அதை ஓட்டி வந்தது, அந்த வாகனம் இலகுவாக செல்ல சாலையை உருவாக்கியது என கணக்கிலடங்கா பல தொழிலாளர்களின், பலவிதமான வேலைகள் அடங்கி உள்ளது.


         
இதில் எந்த தொழிலாளர் உயர்ந்தவர், எந்த வேலை சிறந்தது, எந்த வேலை தாழ்ந்தது, எந்த தொழிலாளர் தாழ்ந்தவர் என்று உங்களால் சொல்ல முடியுமா? வேறுபடுத்திப் பார்க்க முடியுமா? இதில் எங்கே ஏற்றத்தாழ்வு இருக்கிறது? இந்த உலகத்தில் ஒவ்வொரு தொழிலும், ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. எதையும் உங்களால் பிரித்துப் பார்க்க முடியாது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று சரியாக நடை பெற முடியாது.

முடி திருத்துபவர் இல்லை என்றால் எல்லோரும் ஆதி மனிதர்களைப்போல் நீண்ட முடியுடனும், தாடியுடனும் இருக்க வேண்டி இருக்கும். ஒரு முறை நமது மகாத்மா காந்தியடிகள் கூட அவரது கேசத்தை அவரே வெட்டி சரி படுத்தி கொண்டார். அதை அவர் தாழ்வாக எண்ணவில்லை. சாலையை சுத்தம் செய்பவர், மண்பாண்டம் செய்பவர், ஆடை வெளுப்பவர்உணவிற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்யும் விவசாயி, நமது வீட்டை கட்டி கொடுத்த தொழிலாளி,  தினமும் அதிகாலையிலேயே செய்தி தாள், பால் விநியோகிப்பவர் என சொல்லி கொண்டே போகலாம். இதில் ஒவ்வொரு வேலையும் இன்றியமையாதது, அவசியமானது, சமமானது.

         ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த தொழில்களை செய்யும் தொழிலார்களை நாம் சமமாக மதிப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அலுவலகங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் மின்விசிறி, குளிர்சாதன அறைகளில் இருந்து கொண்டு செய்யும் வேலைகள் மட்டுமே உயர்ந்தது எனவும், மற்ற வேலைகள் எல்லாம் அதைவிட தாழ்ந்தது எனவும் ஒரு தவறான சமுதாய சிந்தனையை நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய அறிவீனமான எண்ணம் என்பதை இப்போதாவது  சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
 
என்றேனும் உங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள், உங்கள் வகுப்பறையை சுத்தபடுத்தும் தொழிலாளிகள், உங்களை பாதுகாப்பாக  பள்ளி கொண்டு வந்து சேர்க்கும் ஓட்டுனர் போன்றவர்களிடம் வணக்கம் சொல்லி அவர்களின் நலம் விசாரித்து இருக்கிறீர்களா? இல்லை என்றுதான் பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கும். ஏன், இன்னும் சொல்லபோனால் உங்களை விட வயதிலும், அனுபவத்திலும் உயர்ந்த அவர்களை பெயர் சொல்லி அழைத்தும், ஒருமையில் மதிப்பின்றி பேசியும் கூட இருப்பீர்கள் என்பதுதான் சற்று கசப்பான உண்மை.

அந்த மதிப்பு இல்லாத வேலையாக நீங்கள் எண்ணுபவற்றை, அந்த தொழிலாளிகள் செய்ய மறுத்து விட்டால்,  நீங்களே அதை உங்களுக்காக செய்து கொள்ள வேண்டி இருக்கும். ஒவ்வொரு வேலையுமே மூளையை, திறமைகளை உபயோகித்து செய்ய வேண்டியதே அன்றி எவரும் எந்த வேலைகளையும் எளிதாக செய்து விடமுடியாது. மருத்துவர்பொறியாளர், ஆட்சித்தலைவர், வழக்குரைஞர் போன்றவர்கள் மட்டுமே அறிவைப் பயன்படுத்தி வேலை செய்வது போலவும்இதர  வேலைகளை செய்பவர்கள் வெறும் உடல் உழைப்பைப் பயன்படுத்தி மட்டுமே வேலை செய்கிறார்கள் போன்ற தவறான எண்ணம் சமுதாயத்தில் உள்ளது.  இதெல்லாம் ஒரு வேலையா என்று நீங்கள் தாழ்வாக நினைக்கும் ஒரு வேலையை நீங்களே செய்து பாருங்கள். அப்போதுதான்  அதை எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் நமக்காக அந்த தொழிலாளி உழைப்பதை உணர முடியும். கலை நயத்துடன் செய்யும் மேசை, நாற்காலிகள், மண்பாண்டங்கள், பாத்திரங்கள், கைவினைபொருட்கள், சிற்பங்கள் இவற்றில் எந்த வேலையை  மூளையோ  திறமையோ இல்லாமல் செய்து விட முடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

       மேலை நாடுகளில் படிக்கும் மாணவர்கள் கூட உணவகங்களில் உணவு பரிமாறும் வேலைகளை, விடுமுறை நாட்களில் செய்து தங்களுக்கு தேவையான வருவாயை ஈட்டிக் கொள்கின்றனர். அந்த வேலைகளை அவர்கள் தாழ்வாக எண்ணுவதும் இல்லைஅந்த வேலையை செய்ய தயக்கம் கொள்வதும்  இல்லை. செருப்பு தைக்கும் தொழிலை செய்து கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன் பின்னாளில் அமெரிக்காவின் அதிபராக உயர்ந்தார் என்ற வரலாறு நீங்கள் அறிந்திருப்பீர்கள்

                   என்றேனும் உங்கள் வேலையை  நீங்களே செய்து கொண்டதுண்டா? நீங்கள் சாப்பிட்ட தட்டை நீங்களே துலக்கி வைக்கலாம். உங்கள் ஆடையை நீங்களே துவைத்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டை சுத்தம் செய்யலாம்.  உங்கள் தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சலாம். சில சமயங்களில் இதை நீங்களே செய்து கொள்ளுங்கள். உங்கள் வேலையாளின் விடுமுறை தினங்களில் இது உதவியாக இருக்கும். மேலும் அந்த வேலைகளை நீங்கள் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். அதுமட்டுமல்ல, அந்த வேலைகைளின் மீதான மதிப்பும், அந்த  வேலையை  செய்யும் தொழிலாளியின் மீதான மதிப்பும் உயரும்.  உங்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
               
     இனி அவர்களின் மீதான உங்கள் பார்வைகள் மாற வேண்டும். அவர்களிடம் நீங்கள் அன்பும், மதிப்பும் செலுத்த வேண்டும். அவர்கள் மீதான உங்கள் பார்வைகள் மாறும் போது, உங்கள் மீதான அவர்களின் பார்வையும், அன்பும், மதிப்பும் கண்டிப்பாக அதிகரிக்கும். அவர்களின் வேலைத் தரமும் உயரும். தனி மனித மாற்றத்தால் மட்டுமே சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

 
கடவுளின் படைப்பில் உயர்வோ தாழ்வோ இல்லாதபோது இந்த தொழில்களில் மட்டும் எவ்வாறு ஏற்றத்தாழ்வு இருக்க முடியும்? நம் எண்ணங்களில் தான் ஏற்றத்தாழ்வே அன்றி எந்த தொழில்களிலும் கண்டிப்பாக  ஏற்றத்தாழ்வு  என்பதே இல்லை. மனிதனை மனிதனாக மதியுங்கள். மாறாக அவர்கள் செய்யும் தொழிலை வைத்து எடை போடாதீர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மானம் உள்ளதை உணர்ந்தால் அவர் செய்யும் தொழிலுக்கும் தன்மானம், மதிப்பு உள்ளதை உணர்ந்து கொள்ளலாம். நேர்மையாக செய்யும் எந்த தொழிலுமே தாழ்ந்ததும் இல்லை, அதை செய்யும் தொழிலாளியும் தாழ்ந்தவரும் இல்லை என்ற உண்மையை, உலக நியதியை எல்லோரும் உணர்ந்து விட்டால், இனி இங்கே மனிதர்களுள்ளேயும், அவர்கள் செய்யும் தொழில்களிலும் வேறுபாடோ, ஏற்றத்தாழ்வு என்பதோ இல்லாத சமதர்ம சமநீதி  சமுதாயம் உருவாகிவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வாழ்க வளமுடன்!

Thursday, January 6, 2011

மோகனச்சாரலின் காபி ஷாப் - 06-01-2011

நண்பர்கள்  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அப்படியே காபி, பிஸ்கட் எடுத்துக்கங்க..

*************************************************************
தற்போது சாலை பாதுகாப்பு வாரம்  கொண்டாடப்படுகிறது. அதில் என்ன உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள் என
நீங்களும் பாருங்கள். முடிந்த அளவு அதைப் பின்பற்ற முயலுங்கள்.


*************************************************************
மொபைல் போனிலிருந்து அதிகப் படியான கதிர்வீச்சு வருவதாகவும், அது நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது எனவும் நீங்கள் சமீப காலமாக கேள்விபட்டு கொண்டு இருப்பீர்கள் அல்லவா? இந்த கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் Anti Radiation Chip  எனும் பொருளை தங்கள் மொபைலின் மீது பொருத்திகொண்டால் எந்த தீய விளைவுகளும் ஏற்படாது என அடிக்கடி தற்போது செய்திதாள்களில் பார்க்கிறேன். உங்களின் பார்வைக்காக இங்கே கொடுத்தும் இருக்கிறேன். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது, இதன் தரம் என்ன என தெரியவில்லை. வெளிநாடுகளிலும் இது போல் ஏதாவது உள்ளதா? இதைப்பற்றி தெரிந்தவர்கள் சொன்னால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்பது என் கருத்து.


 *************************************************************

தமிழகத்தில் மின் கட்டணம் ஆன்லைனில் செலுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் உங்கள் வீட்டில் கணக்கீட்டாளர்  மீட்டர் ரீடிங் எடுத்த மறு நாளில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தி விடவேண்டும் என்பது தெரியுமா? முன்பெல்லாம் மீட்டர் ரீடிங் எடுத்த அடுத்த மாதம் 15 தேதிக்குள் செலுத்தினால் போதும். இப்போது ரூல் மாறிவிட்டது போல. உங்கள் ஏரியாவில் இந்த விசயத்தை உறுதிபடுத்திக்கொண்டு அபராத கட்டணத்தை தவிருங்கள்.
*************************************************************

உலகின் முதன்முதலில் அனுப்பப்பட்ட SMS எங்கிருந்து என்ன செய்தி என்று தெரியுமா?
இங்கிலாந்தில் 1992ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் நெய்ல் பேப்வொர்த் (Neil Papworth) என்பவர் ரிச்சர்ட் ஜார்விஸ் (Richard Jarvis) என்ற நபருக்கு Merry Christmas என்று அனுப்பினார்.
இது எனக்கு ஒரு நண்பர் SMS ல் அனுப்பியது.
*************************************************************

நகைச்சுவைப் பக்கம்.....

ஏங்க படிச்சுக்கிட்டு இருக்கிற பையன போய் அடிக்கிறீங்க?!?

அட நீங்க வேற சார்! பரிச்சைக்கு கூட போகாம படிச்சுக்கிட்டு இருக்கான்!
 *************************************************************

வாழ்க வளமுடன்!