Friday, February 18, 2011

மோகனச்சாரலின் காபி ஷாப் - 18-02-2011

இன்று (18-02-2011) நம் இந்தியாவில் விமான சேவையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. மென்மேலும் இந்த சேவை நல்லமுறையில் தொடர வாழ்த்துவோம்.

அப்புறம் ஒரு சின்ன தகவல்:-

இந்தியாவின் விமானப் போக்குவரத்து சகாப்தம் 18 பிப்ரவரி, 1911ஆம் ஆண்டு, ஹென்றி பைகுயட் ஒரு பிப்ளேனில் 8500 மெயில்களை எடுத்துகொண்டு அலகாபாத்திலிருந்து நைனிக்கு 6 மைல்கள் பறந்து  சென்றதில் தொடங்கியது.
*************************************************************

சென்சஸ் அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9, 2011 தொடங்கி பிப்ரவரி 28, 2011 வரை  நடக்கிறது. தவறாமல் அனைவரும் தங்கள் தகவல்களை அளித்து, விடுபடாமல் இந்த கணக்கெடுப்பில் தங்களை சேர்த்துகொள்வதை  உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு, இந்த வலை தளத்தை பாருங்கள்.
http://www.census.tn.nic.in/
http://www.censusindia.gov.in/

*************************************************************

சமீபத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியது உங்களக்கு தெரியும். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்திய விதம் கொஞ்சம் மனதை நெருடியது. அதாவது தங்கள் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்த அவர்களுக்கு எப்படி
மனம் வந்தது எனத் தெரியவில்லை. மாட்டின் ரத்தம்தான் பாலாக மாறி வருவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டப் பாலை வீணாக சாலையில் கொட்டுவதைத் தவிர்த்து வேறு வகையில் போராடி இருக்கலாமோ என ஆதங்கப்பட வேண்டியதை யாரும் மறுக்கமுடியாது என நினைக்கிறேன்.
*************************************************************

செல்போனின் கதிர்வீச்சு நமது உடல்நலத்தை பாதிப்பதாக அடிக்கடி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதைபற்றிய எந்த விழிப்புணர்வு பிரச்சாரமும் எந்த விதத்திலும் இதுவரை வரவில்லை. மாறாக பேசுங்கள், பேசுங்கள், பேசிக்கொண்டே இருங்கள்நடந்து கொண்டே பேசுங்கள், இரவு முழுவதும் பேசுங்கள் என்று மூளை சலவை செய்து கொண்டுதான் விளம்பரம் வருகிறது. இதற்கு  காரணம் பலவாக இருந்தாலும் , பல்லாயிரக்கணக்கான கோடிகள் சம்பந்தப்பட்ட வியாபாரம் என்பதும் ஒன்றாக இருக்கலாம். எனவே அதைப்பற்றி எதையும் எதிர்பார்க்காமல் நம் நலத்தை நாம் காத்துகொள்வதே உத்தமம். எந்த இடத்தில் எல்லாம் லேன்ட்லைன் இருக்கிறதோ அங்கெல்லாம் செல்போனைத் தவித்து, லேன்ட்லைன்'ஐ பயன்படுத்துங்கள். உங்கள் உறவினர்/நண்பர் வீட்டில் லேன்ட்லைன் இருந்தால் பெரும்பாலும் அதிலேயே தொடர்பு கொண்டு அவர்கள் உடல் நலத்தை பேணுங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டும் செல்போனை உபயோகிக்கலாம். குறிப்பாக செல்போனை குழந்தைகள் உபயோகிப்பதை அடியோடு தவிர்ப்பது நலம்.

*************************************************************

நகைச்சுவைப் பக்கம்.....
ஒரு குடிகார கணவன் குடித்துவிட்டு தன்னுடன் ஒரு பூனையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்கிறான்.  "இங்கே பார்! ஒரு பெரும் காட்டுக் கரும்  குரங்கு!" என்றான்.
மனைவி சிரித்துக்கொண்டே "ஐயோ... இது குரங்கு இல்லை. பூனை!" என்றாள்.
அதற்கு  கணவன் சொல்கிறான்...
 "
நான் உன்னிடம் பேசவில்லை, இந்த பூனையிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்!"
 
*************************************************************

வாழ்க வளமுடன்!

Friday, February 4, 2011

மருந்து/மாத்திரைகள் உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்


சமீபத்தில் ஒரு மருந்து கடை ரசீதின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த குறிப்புகள் மிகவும் உபயோகமாக இருந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக மருந்து சீட்டில் மருத்துவர்கள் குறிப்பிடும் சில  சுருக்கங்களின் விளக்கம்:-
STAT(statim) - Start Immediately - உடன்  தொடங்கவும்.
O.M. Omni mane (Morning Only) காலை மட்டும்.
O.D. Omni die(Daily Only)  தினசரி ஒன்று மட்டும்.
B.D Bis die(Daily twice) தினசரி இரண்டு.
T.D.S Ter die sumendus (Thrice daily) தினசரி மூன்று.
Q.D.S Quarter die sumendus (Four times only) தினசரி நான்கு.
Q.Q.H Quarta quaque hara(Every four hours) நான்கு மணி நேரத்திற்கு ஒன்று.
A.C./B Ante cibum (Before Food) சாப்பிடும் முன்.
P.R.N. Pro re neta (when required) தேவைப்படும் பொது.
S.O.S Only acute pain. வலி ஏற்படும் பொது.
H.S. One at night இரவு மட்டும்.

மருந்து/மாத்திரைகள் உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:-

1. மருத்துவர் குறிப்பிட்ட காலம்வரை எழுதிக்கொடுக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் இடைவிடாமல் சாப்பிடவும்.

2. மருந்துகள் வாங்கும்போது மருந்தின் பெயர், காலாவதியாகும் தேதி போன்றவற்றை அட்டையில் சரிபார்த்து வாங்கவும். போதிய வெளிச்சத்தில் மருந்தை சரிபார்க்காமல் உட்கொள்வதை தவிர்க்கவும்.

3. மாத்திரை அட்டையிலிருந்து பிரித்தேடுக்கும்போது மீதமுள்ள மாத்திரைகள் பக்கம் காலாவதியாகும் தேதி இருக்கும்படி பிரிக்கவும்.

4. மருந்துகளை குழந்தைகளின் கைகளில் எட்டாமலும், உலர்ந்த இடத்திலும் வைக்கவும்.

5. மருத்துவரிடம் செல்லும்  ஒவ்வொரு முறையும் தாங்கள் வாங்கிய மருந்து சீட்டையும், கடை ரசீதையும் தவறாமல் எடுத்து  செல்லவும்.

6. ஏதேனும் மருந்துகள் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால் மருந்தாளுனரிடம் தயக்கமில்லாமல் கேட்கவும்.

வாழ்க வளமுடன்!

Tuesday, February 1, 2011

மோசடி செல் சேவை/டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள்

நான் பீ.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு சிம் வைத்துள்ளேன். ஒரு நாள் திடிரென ஒரு மெசேஜ் வந்தது. நீங்கள் மொபைல் ரேடியோ சேவையில் சேர்ந்துள்ளீர்கள். அதற்காக மாத கட்டணமாக  19 ருபாய் பிடித்தம் செய்துள்ளோம் என்று. நான் எந்த மெசேஜ்ம் இது சம்பந்தமாக அனுப்பவில்லை. எப்படி இது சாத்தியம்? உடனே கால் சென்டருக்கு போன் செய்தேன். நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட போராட்டங்களுக்கு பிறகு மறுநாள் கால் சென்டர் தொடர்பு கிடைத்தது. அவர்கள் இது சம்பந்தமாக நாங்கள் எதுவும் செய்ய முடியாது, உள்ளூர் பீ.எஸ்.என்.எல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்கள்.

நானும் ஒரு புகார் கடிதம் ஒன்றை தயார் செய்துகொண்டு உள்ளூர் பீ.எஸ்.என்.எல் அலுவலகம் சென்றேன். நீங்கள் உங்களை அறியாமலே ஏதாவது கீயை பிரஸ் செய்து இருப்பீர்கள், அதனால் உங்களுக்கு சப்ஸ்க்ரைப் ஆகி இருக்கும் என்றும்,  கழிக்கப்பட்ட 19 ருபாய் ஒன்றும் செய்ய முடியாது, இருந்தாலும் புகாரை பதிவு செய்து கொள்கிறோம் என்றும் சொல்லிவிட்டார்கள். புகார் கொடுத்ததற்கு எந்த ரெசிப்டும் கொடுக்க முடியாது என்றும், அடுத்த மாதம் இதே நாள் உங்களிடமிருந்து இந்த கட்டணம் பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் உங்கள் பிரச்சனை சரியாகிவிட்டது என்று மிகவும் பொறுப்பாக பதில் தந்தார்கள்.

என்ன கொடுமைங்க?!? இப்படி எத்தனை வாடிக்கையாளரிடம் அந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனம் கொள்ளை அடித்துகொண்டிருக்கிறார்கள்? என் சம்மதம் இல்லாமலேயே என் பாக்கெட்டிலிருந்து 19 ருபாய் கொள்ளை அடிப்பதற்கும், இந்த செயலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இந்த பகல் கொள்ளைக்கு செல் சேவை நிறுவனங்கள் வேறு துணை போகிறதே? நாட்டில் எத்தனை படிப்பறிவு இல்லாத ஏழை வாடிக்கையாளர்களிடம் இது போன்ற நிறுவனங்கள் கொள்ளை அடித்துக் கொண்டு உள்ளார்களோ தெரியவில்லை. என்னைப் போன்று இதை கவனித்து புகார் செய்யா விட்டால் ஒவ்வொரு மாதமும் உங்கள் பணமும் கொள்ளை அடிக்கப் படலாம். அடிக்கடி தேவை இல்லாத மெசேஜ் வந்து கொண்டிருக்கிறதே என்று படித்து பார்க்காமல் எந்த  மெசேஜ்ஐயும்  அழித்து விடாதீர்கள். உங்களுக்கு தெரியாமலே உங்கள் பணம் கொள்ளை அடிக்கப் படலாம்.


இத்தனைக்கும் நான் Do Not Disturb என்பதில் பதிவும் செய்து உள்ளேன். இதனால் ஒரு பயனும் இல்லை. தினமும் குறைந்தது 4, 5 தேவை இல்லாத மெசேஜ் வருகிறது. இந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு ட்ராய் (TRAI Telephone Regulatory Authority of India) அதாவது தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையம் என்ற அமைப்பில் இருந்து லைசன்ஸ் பெற்றே வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்கிறது. எனக்கு வரும் மெசேஜ்ஐ பாருங்கள். இன்று இரவு 5 பெண்கள் உங்களிடம் சாட்டிங் செய்ய விரும்புகிறார்கள், விரும்பினால் SEND DOSTG TO xxxxx. இப்படியெல்லாம் மெசேஜ் வருகிறது. எத்தனை சபல எண்ணம் உடைய விடலைப் பையன்கள், ஆண்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. இதெற்க்கெல்லாமா TRAI லைசன்ஸ் தருகிறது. டெலிமார்க்கெட்டிங்கிற்கு ஒரு வரைமுறை இல்லையா? போகிறபோக்கை பார்த்தால் இன்று இரவு பெண்களை உங்களிடம் அனுப்பி வைக்கிறோம், விரும்பினால் SEND DOSTG TO xxxxx என்று அனுப்பி வைத்தாலும் ஆச்சர்யப்பட வேண்டிஇருக்காது.

அடிக்கடி தேவை இல்லாத மெசேஜ் அனுப்பினால் லட்ச்ச கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளது. என்ன பிரயோஜனம்? டெலிமார்க்கெட்டிங்கிற்கு லைசன்ஸ் கொடுத்து விட்டு அவற்றை ட்ராய் தொடர்ந்து கண்காணிக்காததையே இது காட்டுகிறது.

இவற்றுக்கெல்லாம் என்ன தீர்வு வைத்துள்ளது TRAI?
யாருக்கு தெரியும் என்கிறீர்களா? அதுவும் சரிதான்! செல்போன் என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக ஆ(க்)கிவிட்டபிறகு இத்தனை தொந்தரவுகளுடன் அதை பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலையில் வேறு என்னதான் செய்வது? புலம்பிக்கொண்டே பயன்படுத்துவதைத் தவிர?!?

வாழ்க வளமுடன்!