Thursday, March 12, 2009

வால்பாறை - சோலையார் -- அதிராம்பள்ளி - ஒரு ஜாலி டூர்

ரொம்ப நாட்களாகவே எங்காவது பிக்னிக் சென்று வர நினைத்திருந்து ஒரு வழியாக சென்ற சனிக்கிழமை வால்பாறை சென்று வர நண்பர்கள் 5 பேராக புறப்பட்டோம்.

காலை 8.30 மணிக்கு வால்பாறை அடிவாரம் சென்று விட்டோம். அங்குதான் வேதாந்த மகாரிஷியின் மடம், ஆழியார் அணை போன்றவை உள்ளது. கோடை தொடக்கம் என்பதால் அணையில் நீர் குறைவாகத்தான் இருந்தது. அங்கிருந்து வால்பாறை 40 கி.மீ. மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். எதிர்பார்த்த அளவு பசுமையாக இல்லை. ஆனாலும் ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் மனம் கொஞ்சம் பதறத்தான் செய்தது. வழியில் நிறுத்தி போட்டோவும் எடுத்தோம். மலையில் ஏற ஏற தமிழில் பாடிக் கொண்டிருந்த சூர்யன் எப்.எம் மலையாளத்தில் பாடத் தொடங்கிவிட்டது. இருந்தாலும் மழைக் காலம் முடிவில் நண்பர்கள் சென்று வந்த போது எடுத்து வந்த போட்டோவைப் பாருங்கள் கீழே .காலை 9.45 மணிக்கு வால்பாறை பாலாஜி கோவிலுக்கு சென்று சாமிக் கும்பிட்டோம். இது ஒரு தனியார் எஸ்டேட் நிர்வாகத்தால் நிர்வகிக்கப் படுகிறது.

வழி நெடுக இருக்கும் பேருந்து நிறுத்தம் வெள்ளைத்துரை கனவான்களின் பெயர்களில்தான் இன்றும் இருக்கிறது, சுதந்திரம் பெற்று விட்ட போதும். காட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து காபி, தேயிலை தோட்டங்களாக மாற்றிக் கொண்டிருகின்றனர். அதனால்தானோ என்னவோ குளிர்ந்த காற்றுக் கூட வீசவில்லை. ஊர் கொஞ்சம் சிறியதுதான்.
11.30 மணிக்கு சோலையார் அணை சென்றோம். அங்கும் நீர் கொஞ்சமாகத்தான் இருந்தது. அங்குதான் சுமாராக இருந்த ஹோடேலில் சாப்பிடோம். என்னடா இது, இந்த காஞ்சு போன ஏரியாவைப் பார்க்கத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோமா என்று வருத்தப் பட்டபோது நண்பர் ஒருவர் கேரளாவில் உள்ள (சுமார் 70 கி.மீ.) அதிராம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவோம் என்றார். இந்த நீர் வீழ்ச்சியை நீங்கள் அனைவருமே திரைப் படத்தில் பார்த்திருப்பீர்கள். புன்னகை மன்னன் படத்தில் கமல், ரேகா இருவரும் முத்தமிட்டுக் கொண்டு (மறக்க முடியுமா என்ன?) குதிப்பார்களே அதேதான். ஏய் படத்தில் நம்ம சரத்தும், நமீதாவும் அர்ஜுனா பாட்டுக்கு ஆடுவார்களே அதே நீர் வீழ்ச்சிதான்.
கேரள செக் போஸ்டில் நிறுத்தி தகவல்களை அளித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். கொஞ்ச தூரம் சென்ற உடனே அடர்ந்த காடு ஆரம்பமாகி விடுகிறது. இரண்டு வித்தியாசங்களை உணர முடிந்தது. ஒன்று தமிழக எல்லையில் சாலை வசதி நன்றாக இருக்கிறது. ஆனால் கேரள எல்லையில் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. இரண்டாவது தமிழக எல்லையில் காட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கேரள எல்லையில் வனத்தை போற்றிப் பாதுகாக்கிறார்கள். தானாக விழும் மரத்தை கூட அப்படியே விட்டு விடுகிறார்கள். இயற்கையை அதன் போக்கிலேயே விட்டு வளர்க்கிறார்கள். "God's Own Country" என்று சொல்லிக் கொள்ள முழுத் தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது.

யானை நடமாட்டமுள்ளப் பகுதி என்பதை யானையின் லத்தியை(கழிவு) வைத்து அறிந்து கொள்ள முடிந்தது. மனதில் லேசாக ஒரு பீதி பரவ ஆரம்பித்தது. எதிரில் எந்த வாகனமும் வரவில்லை. எந்த கிராமமும் கூட வழியில் இல்லை. ஒருப் பக்கம் யானை பயம், மறுப்பக்கம் ஆழமான பள்ளத்தாக்கு, கொஞ்சம் திரில்லிங்கான பயணமாகத்தான் இருந்தது. கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விட்டோமோ என்று பயந்தோம். ஒரு நண்பர் ரிஸ்க் எடுப்பதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்றார். மற்றொரு நண்பரோ அட எங்கப்பா இப்ப ரஸ்க் சாப்பிடுவதே ரிஸ்க் ஆகி விடும் போலிருக்கிறது என்றார். பயம் இருந்தாலும் நண்பர்களுக்குள் கமெண்ட்ஸ் அடித்துக் கொண்டு சென்றதால் மிகவும் ஜாலியாகத்தான் இருந்தது.

வழியில் ஒரு காட்டருவி. ஆஹா! அற்புதம்! என்ன ஒரு ஜில்! அதை கீழே இருக்கும் வீடியோவில் நீங்களே பாருங்கள்! ஹோ என்ற இரைச்சலுடன் ஸ்பீக்கர் ஆன் செய்து கேளுங்கள்!
ஒரு வழியாக 3.30 மணிக்கு அதிராம்பள்ளி அடைந்தோம். டுரிஸ்ட் ஸ்பாட் என்பதால் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் வந்தது. டிக்கெட் வாங்கி கொண்டு ஒரு அரை கி.மீ. நடைப் பயணத்தில் நீர் வீழ்ச்சிக்கு சென்றோம். அடடா! என்ன அற்புதம்! வாவ்! இயற்கையின் அழகிற்கு ஈடேது? அருவிக்கு அருகில் செல்ல ஒரு செங்குத்தானப் பாதையில் சென்றோம். வர்ணிக்க வார்த்தை இல்லை. தண்ணீர் பாறையில் பட்டு தெளிக்கும் சாரலில் ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து நின்றால் குளித்து விடுவீர்கள். ஹோ என்ற இரைச்சலுடன் ஸ்பீக்கர் ஆன் செய்து கேளுங்கள்!சாரலின் அழகை மட்டுமே ரசிக்க முடியுமா என்ன? அதை ரசிக்கும் கேரளத்துப் பொண்ணுங்களையும்தான்! சும்மா சொல்ல கூடாது பாஸ்! நம்ம ஊர் பொண்ணுங்களை விட அங்கே கொஞ்சம் சூபெர்தான்! கூட வந்த நண்பர் ஒருவருக்கு ஒரு சந்தேகம், தமிழ் நாட்டுக்கு ஒரு பிரமன், கேரளத்துக்கு ஒரு பிரமனா என்று? (கொஞ்சம் ஓவறாகத்தான் போய்க்கிட்டு இருக்கோ? வீட்டில் தங்கமணி இதை எல்லாம் படிக்க மாட்டார்கள் என்ற தைரியம்தான். சரி போதும் நிப்பாட்டிக்குவோம்.)

அருவியில் குளிக்க முடியாது. மேலே இருக்கும் ஆற்றில் ஒரு குளியல் போட்டு விட்டு ஒரு 2 மணி நேரம் செலவு செய்து விட்டுப் புறப்பட மனம் இல்லாமல் புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.

9 comments:

ரமேஷ் வைத்யா said...

விவரணைகள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துகள்.

Mohan said...

//ரமேஷ் வைத்யா said...
விவரணைகள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துகள்.
//
வாங்க ரமேஷ் வைத்யா! வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

G S said...

Mihavum sirappaga varunanai seithirukkrirkal. Migavum nantri. I have decided to go to this place soon. Thanks for your comments.
G.S.Pandi

Mohan said...

வாங்க ரமேஷ் G S! வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

ArunSankar said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். என் தாயார் சின்கோனா (வால்பாறை) வில் உள்ள “Government Quinine Factory” மற்றும் வனத்துறையில் பணியாற்றியதால் நான் அங்கேதான் 9 ம் வகுப்பு வரை படித்தேன். உறவினர்களிடமும் நண்பர்களுடனும் இளமை கால பேச்சை எடுத்தாலே அதில் வால்பாறைதான் வரும். சுற்றுலா செல்வதற்கு மிக அருமையான இடம். வால்பாறை மற்றும் அதை சார்ந்துள்ள இடங்களில் சுற்றுலா என்பது மிக சமீபமாக ஆரம்பித்ததுதான். முன்பெல்லாம் அப்பகுதி சுற்றுலா ஸ்தலமாக அறிந்திருக்கப்படவில்லை. சமீபத்தில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் பழைய நினைவுகளை நிஜமாக்கி மகிழ்ச்சி பெற பெங்களூரிலிருந்து வால்பாறை சென்றோம். அங்குள்ள சின்னகல்லார், பெரியகல்லார், நீரார் அணை, 7th டாப், 5th டாப், ஈட்டியார், சிறுகுன்றா போன்ற பல இடங்களை பார்க்கும்போது மனது மிக மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இருந்தபோதெல்லாம் எங்கள் உறவினர்கள் வருட விடுமுறைக்காக வால்பாறை வந்து சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் சுற்றுலா வேறு, அங்கேயே வசித்திருப்பது வேறு. வசிப்பவர்களுக்குதான் அங்குள்ள கஷ்டங்கள் புரியும். ஆனால் இப்பொழுது வால்பாறையில் எல்லா வசதிகளும் வந்து விட்டன. சென்ற பயணத்தில் நானும் நிறைய புகைபடங்களை எடுத்துள்ளேன். காலம் அவகாசம் தருமாயின் அவற்றை இணையத்தில் பதிவு செய்கிறேன்.

Mohan said...

வாங்க ArunSankar! வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி! உங்களின் இளமை கால மலரும் நினைவுகளை இந்த கட்டுரை கொண்டு வந்தது குறித்து மிகவும் மகிழ்கிறேன்!!

prabakaran said...

Valparai Maraka Mudiyatha Oru Anupavam...

Iravanin Ezil Konjum Azaku...

நடிக்கலாம் வாங்க! said...

எனக்கும் பாக்கணும் போல இருக்கு... நண்பர்களை தயார் பண்றேன்...

நடிக்கலாம் வாங்க! said...

எனக்கும் பாக்கணும் போல இருக்கு... நண்பர்களை தயார் பண்றேன்...