Tuesday, August 3, 2010

புத்தகம் வாசிக்கும்/நேசிக்கும் பழக்கம்

இப்பொழுதெல்லாம் நான் பிறந்த நாள், திருமணம் போன்ற விஷேசங்களுக்கு பரிசாக  சுய முன்னேற்ற/சிந்தனை புத்தகத்தை பரிசாக கொடுத்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை  அதிக செலவு செய்து பரிசுப்பொருள் கொடுப்பதை  விட, குறைவான செலவே ஆனாலும் புத்தங்களை பரிசாக கொடுப்பதையே திருப்தியாக நினைக்கிறேன். ஏனெனில் அவர்களின் அடுத்த தலை முறைக்கும் இந்த புத்தகம் இருக்கும், பயனுள்ளதாகவே அமையும். எல்லோரும் கொடுக்கும் கடிகாரங்கள், ஓவியங்கள், சிலைகள், பாத்திரங்கள் போன்றவற்றை நீங்களும் ஏன் பரிசாக கொடுக்க வேண்டும்? அவை எல்லாமே அவர்களிடமே இருக்கும்... புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர் கூட சரி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என படிக்க நினைப்பார்கள், அப்படியே அவர்களிடம் அந்த படிக்கும் பழக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதல்லாவா? 
 


பெரும்பாலும் யாரும் பாடப் புத்தககளை/வார இதழ்களை  தவிர மருந்துக்கும் கூட வேறு எந்த புத்தகத்தையும் படிப்பதில்லை.  அவர்கள் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், இந்த பழக்கம் ஒன்றே நம்மை சிந்திக்க வைக்கும், நமது வாழ்க்கையை ஒரு நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வழியைக் காட்டும். எந்த சிந்தனையும், எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் "வெந்ததைத்  தின்று விதி வரும் போது சாவேனே"  என்று வாழ்வது  ஒரு வாழ்க்கையே இல்லை. பின் ஆறு அறிவு பெற்ற மனித வாழ்க்கைக்கும்ஐந்து அறிவு பெற்ற விலங்கு வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

கடமைக்கு படிக்காமல் தினம் 5, 6 பக்கம் படித்தாலும் உணர்ந்து படிக்க வேண்டும்.  படித்ததை, அதில் உள்ள நல்லவற்றை நம் வாழ்வில் முடிந்த வரை கடைப்பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் கடைப்பிடிக்க முயற்சியாவது செய்ய வேண்டும். சொல்வது எளிது, ஆனால் சொல்லியதை கடைப்பிடிப்பது கடினமே... அதனால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் நாளடைவில் அதை கடைப்பிடிப்பது எளிதாகிவிடும்.

நமது பெரும்பாலான ஓய்வு நேரங்களை T.V பார்ப்பதிலேயே செலவழித்து விடுகிறோம். பின் சிந்திக்க என்ன வழி? உலக நடப்புகளை, நல்ல விசயங்களை, தகவல்களை பின் எப்படிதான் தெரிந்து கொள்வது?. ஒரே வழி, Reading habits அதாவது புத்தகம், செய்திதாள்கள்  படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது. நல்ல விசயங்களை, பழக்கங்களை சொல்வதும், செய்வதும், கேட்பதும் இந்தக் காலத்தில் கேலி செய்யப்படுகிறது, வெட்கப்பட வேண்டி இருக்கிறது, கூச்சப் பட வேண்டி இருக்கிறது. ஆனால் பெற்றோர்கள்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் எல்லோர் முன்னிலையிலும் பார்க்க வெட்கப்பட வேண்டிய காட்சிகளை கொஞ்சம் கூட சங்கடமோ, கூச்சமோ இல்லாமல் T.Vயிலும், சினிமாவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதாவது உண்மையில் எதற்கு வெட்கப்பட வேண்டுமோ அதற்கு வெட்கப்படாமல், நல்லவற்றை செய்வதற்கு வெட்கப்படுகிறோம் என்ன நண்பர்களேநான் சொல்வது சரிதானே?!? அதனால் அந்த கேலிக் கூச்சல்களை கண்டு கொள்ளாமல் நல்லவற்றை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

நூறு சதவீதம் யாரும் இங்கே Perfect இல்லை. எல்லோரும் தவறு செய்பவர்களே. இதில் யாரும் விதி விலக்கல்ல.  எல்லோருக்குள்ளும் மனிதமும், மிருகமும் இருக்கிறது. இதில் எதை அதிகமாக வெளியே விடுகிறோம் என்பதில் அடங்கி இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம். நாம் செல்லும் பாதை, செய்யும் செயல், பேசும் பேச்சு எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறதா என்பதை சிந்தனை செய்ய, யோசிக்க புத்தகம் ஒரு வழி காட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே தேவை இல்லை. இதன் மூலமே நாம் நம்முள்ளிருக்கும் மிருகத்தைக் கொன்று, மனிதத்தை  வளர்க்க முடியும்.  இங்கே சொல்வது Bore அடிப்பது போல் இருந்தாலும் சிறிது சிந்தித்து நடந்தால் நம் வாழ்க்கை நலமாகவே/வளமாகவே அமையும் என நான் நம்புகிறேன். நீங்கள் நம்புகிறீர்களா?

சமீப காலங்களில் எல்லா விசேஷங்களிலும் எல்லா நண்பர்களுக்கும் நான் புத்தககங்களையே பரிசாகக் கொடுக்கிறேன். இதையேத்தான் இனியும் செய்யப் போகிறேன். நீங்களும் யாருக்கேனும் பரிசளிக்க விரும்பினால் இதையே செய்யலாம்,_உங்களுக்கும் இது உடன்பாடு எனில்...

இபோது கூட ஈரோடு மாநகரில் ஒரு புத்தக கண்காட்சி 30/07/2010 முதல் 10-08-2010 ஆகிய பனிரெண்டு நாட்களுக்கு நடக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் சென்று வாருங்கள்.....


வாழ்க வளமுடன்!              
      

4 comments:

மதுரை சரவணன் said...

//ஈரோடு மாநகரில் ஒரு புத்தக கண்காட்சி 30/07/2010 முதல் 10-08-2010 ஆகிய பனிரெண்டு நாட்களுக்கு நடக்கிறது.//

வாசிப்பை நேசிக்கும் அனைவருக்கும் நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றீ.வாழ்த்துக்கள்

இரா.கதிர்வேல் said...

///ஆனால் பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் எல்லோர் முன்னிலையிலும் பார்க்க வெட்கப்பட வேண்டிய காட்சிகளை கொஞ்சம் கூட சங்கடமோ, கூச்சமோ இல்லாமல் T.Vயிலும், சினிமாவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதாவது உண்மையில் எதற்கு வெட்கப்பட வேண்டுமோ அதற்கு வெட்கப்படாமல், நல்லவற்றை செய்வதற்கு வெட்கப்படுகிறோம்///

நெத்தியடியாக கருத்தை அடித்திருக்கிறீர்கள்.
என்னை முதன் முதலில் நூலகத்திற்கு அழைத்துச்சென்றது ஒரு எட்டாவது படிக்கும் மாணவன்தான் ஆனால் நானோ அப்பொழுது பாலிடெக்னிக்கில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன்.அதன்பிறகு இன்றைய தேதிவரையிலும் நான் நூலகத்திற்கு செல்லாத நாட்கள் மிகவும் குறைவு.தொடர்ந்து நூலகம்சென்றுக்கொண்டிருக்கிறேன்.
என்னுடைய நண்பர்களிடம் நூலகத்தின் அருமையை எடுத்துக்கூறிய பொழுது போயி உங்கள் வேலையைப் பாருங்கள் கதிர்வேல் என்றுக் கூறிவிட்டார்கள்.

Mohan said...

//மதுரை சரவணன் said...
வாசிப்பை நேசிக்கும் அனைவருக்கும் நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றீ.வாழ்த்துக்கள்//

வாங்க மதுரை சரவணன்
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!



//இரா.கதிர்வேல் said...
நெத்தியடியாக கருத்தை அடித்திருக்கிறீர்கள்.
என்னை முதன் முதலில் நூலகத்திற்கு அழைத்துச்சென்றது ஒரு எட்டாவது படிக்கும் மாணவன்தான் ஆனால் நானோ அப்பொழுது பாலிடெக்னிக்கில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன்.அதன்பிறகு இன்றைய தேதிவரையிலும் நான் நூலகத்திற்கு செல்லாத நாட்கள் மிகவும் குறைவு.தொடர்ந்து நூலகம்சென்றுக்கொண்டிருக்கிறேன்.
என்னுடைய நண்பர்களிடம் நூலகத்தின் அருமையை எடுத்துக்கூறிய பொழுது போயி உங்கள் வேலையைப் பாருங்கள் கதிர்வேல் என்றுக் கூறிவிட்டார்கள்.//

வாங்க கதிர்வேல்!
புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே குறைந்து வருவது வருத்தமாகத்தான்
இருக்கிறது. வருகைக்கு நன்றி!

Unknown said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .